டானா புயல்: ஒடிசா முதல்வரிடம் பேசிய மோடி- அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி
- ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
- பாலாசோர் மாவட்டத்தில் 172,916 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான டானா தீவிர புயல் நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கிய நிலையில், இன்று காலை கரையை கடந்தது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கரையை கடந்து வலுவிழக்க இன்று மதியம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதில் சுமார் 4,500 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர், அவர்களில் 1,600 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
தற்போது 6,008 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலாசோர் மாவட்டத்தில் 172,916 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மயூர்பஞ்ச் 100,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பத்ரக்கில் இருந்து 75,000 பேர், ஜாஜ்பூரில் இருந்து 58,000 பேர் மற்றும் கேந்திரபராவில் இருந்து 46,000 பேர் வெளியேறி உள்ளனர்.
அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்து அனைத்து மக்களையும் வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளோம். அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவையை வழங்குவதற்காக, பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் மாநிலத்தின் தயார்நிலை குறித்து ஒடிசா முதல்வர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மத்திய அரசு திருப்தி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
மேலும் டானா புயல் காரணமாக ஒடிசாவில் தீவிர வானிலை நிலவி வருவதால் அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.