இந்தியா

பி.டி.ஐ. செய்தி அலுவலகத்துக்கு சென்ற பிரதமர் மோடி: ஊழியர்களுடன் கலந்துரையாடினார்

Published On 2023-12-10 03:27 GMT   |   Update On 2023-12-10 04:27 GMT
  • செய்தி சார்ந்த மற்றும் சாராத ஊழியர்களுடன் உற்சாகமாக பேசிய பிரதமர், அவர்களது பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
  • பார்வையாளர் குறிப்பேட்டில் பிரபலமான கவிதை ஒன்றை எழுதி கையெழுத்து போட்டார்.

புதுடெல்லி:

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.யின் தலைமை அலுவலகம் டெல்லியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார்.

அங்கு சுமார் 1 மணி நேரத்தை செலவிட்ட அவர், அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். செய்தி சார்ந்த மற்றும் சாராத ஊழியர்களுடன் உற்சாகமாக பேசிய அவர், அவர்களது பணிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட வீடியோ பிரிவையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அத்துடன் கடந்த காலங்களில் செய்திகளை மற்ற மையங்களுக்கு அனுப்ப பயன்படுத்தப்பட்டு வந்த டெலிபிரின்டர் எந்திரம் போன்றவற்றையும் ஆர்வமுடன் பார்வையிட்ட பிரதமர் மோடி, அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் பி.டி.ஐ. தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியர் விஜய் ஜோஷியுடன் பேசிய பிரதமர் மோடி, சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவருடன் விவாதித்தார்.

இறுதியில் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் பிரபலமான கவிதை ஒன்றை எழுதி கையெழுத்து போட்டார். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பின் முதல் முறையாக பி.டி.ஐ. செய்தி அலுவலகத்துக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News