பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்தித்து ஆசி பெற்றார் மோடி
- பிரதமர் மோடியை பாராளுமன்ற குழு தலைவராக எம்.பி.க்கள் தேர்வு செய்தனர்.
- ஞாயிற்றுக்கிழமை மாலை 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.
மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதில் உள்ள கட்சிகள் தேர்வு செய்தன.
இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடியை பாராளுமன்ற குழு தலைவராக எம்.பி.க்கள் தேர்வு செய்தனர். இதனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார்.
இந்த நிலையில் பாரத ரத்னா விருதை பெற்றவரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான எல்.கே. அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார்.
மோடி 3-வது முறை பிரதமராக வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் உலக நாடுகளில் பல தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்.கே. அத்வானியைத் தொடர்ந்து முரளி மனோகர் ஜோஷியையும் சந்தித்து ஆசி பெற்றார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்ட தொடக்க கால தலைவர்களில் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.