ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலில் பயணித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
- கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார்.
- கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார்.
இந்திய கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் கடந்த 2022-ம் ஆண்டு நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.20 கோடி செலவில் இந்த கப்பல் அதிநவீன ஆட்டோமெடிக் அம்சங்களுடன் கட்டப்பட்டது. சுமார் 262.5 மீட்டர் நீளமும், 61.6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் 43 ஆயிரம் டன் எடை கொண்டது. இதுவரை கட்டப்பட்ட கப்பல்களில் இதுதான் மிகப்பெரிய கடற்படை கப்பலாகும்.
இது 75 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரானது. இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிறு,குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாக்கிய எந்திரங்கள், உபகரணங்கள் மூலம் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டது.
இந்த போர்க்கப்பலில் மிக் 29 கே. ரக போர் விமானம், கமோல் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்.60 ஆர். மல்டி போர் ஹெலிகாப்டர் மற்றும் உள்நாட்டு தயாரிப்பான இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்பட 30 விமானங்கள் நிறுத்தி வைக்கலாம்.
அதி நவீன வசதிகளுடன் உருவான ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பலில் நீர் மூழ்கி கப்பல் பயிற்சிகள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் புறப்படுதல், தரை இறங்குதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது.
இந்த கப்பலில் 2,200 பெட்டிகள் உள்ளது. பெண் அதிகாரிகள், மாலுமிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 1,600 பேர் இந்த கப்பலில் தங்கி கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் இக்கப்பலில் உள்ளது.
இந்திய கடற்படையில் ஒரு மைல்கல்லாக திகழும் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக அவர் இன்று கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி முர்முவை கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர் கோவா கடற்கரையில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்க்கப்பலில் பயணம் செய்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவர் முதன் முறையாக போர் கப்பலில் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார். கப்பலின் செயல்பாடுகள், சிறப்பு அம்சங்கள் குறித்து கடற்படை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.