இந்தியா

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடத்துக்கான விருது

Published On 2023-09-28 03:08 GMT   |   Update On 2023-09-28 03:08 GMT
  • மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
  • ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார்.

இந்தூர்:

நாட்டில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த்தும் நோக்குடன் 'ஸ்மார்ட் சிட்டிகள்' எனப்படும் 'பொலிவுறு நகரங்கள்' திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.

அப்போது அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் 66 விருதுகளை வழங்கினார். அதில் 31 விருதுகள் நகரங்களுக்கும், 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 7 நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

நாட்டின் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் சிறந்த நகரத்துக்கான 'தேசிய ஸ்மார்ட் சிட்டி விருதை' இந்தூருக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். குஜராத் மாநிலத்தின் சூரத்துக்கு 2-வது இடத்துக்கான விருதும், உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு 3-வது இடத்துக்கான விருதும் அளிக்கப்பட்டன.

மாதிரி சாலைகள் அமைப்பு, ஏரிகள் மீட்பு, புதுப்பிப்புக்கான சூழல் உருவாக்க பிரிவு விருதும், தென்மண்டல ஸ்மார்ட் சிட்டி விருதும் தமிழ்நாட்டின் கோவை மாநகருக்கு வழங்கப்பட்டன.

குளங்கள் பாதுகாப்புக்காக தஞ்சாவூருக்கு கலாசார விருதும், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் மின் கண்காணிப்புக்காக தூத்துக்குடிக்கு சமூக அம்சங்கள் விருதும் கிடைத்தன.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். தமிழ்நாட்டுக்கு 2-வது இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு 3-வது இடத்துக்கான விருது கூட்டாக வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மத்தியபிரதேச கவர்னர் மங்குபாய் படேல், முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News