பா.ஜ.க. ஆட்சியில் 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. குஜராத், உத்தர பிரதேசத்திற்கு அதிகம்
- ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன.
- விளக்கங்கள் பெற நேரம் எடுக்கும் என்பதால், ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய மந்திரி அஜய் குமார் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது:-
2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரப்பெற்ற 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த 24 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் இருந்து வரப்பெற்ற 23 மசோதாக்கள், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
2014- 2022 காலகட்டத்தில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன. இந்த சட்ட மசோதாக்கள் அனைத்தும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளன.
மசோதாக்கள் தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஆராயும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கங்கள் மற்றும் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இதுபோன்று ஆலோசனை செயல்முறை, கருத்துகள் மற்றும் விளக்கங்களைப் பெறுவதற்கு நேரம் எடுக்கும். எனவே, ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.