முதல் நாளில் பிரதமர் மோடி மற்றும் 279 எம்.பி.க்கள் பதவி ஏற்பு
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் சாசன புத்தகத்தை பிரதமர் மோடியிடம் காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
- மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ பர்த்ருஹரி மஹ்தாப்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லியில் இன்று 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் பிரதமர் மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவுடன் தொடங்கியது.
தேசிய கீதத்துடன் தொடங்கப்பட்டு, கடைசியாக முடித்த பாராளுமன்ற கூட்டத்தில் இருந்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ பர்த்ருஹரி மஹ்தாப்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் தற்காலிக சபாநாயகருக்கு உதவியாக சுரேஷ் கொடிக்குன்னில், தளிக்கோட்டை ராஜுதேவர் பாலு, ராதா மோகன் சிங், ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் சுதிப் பந்தோபாத்யாய் ஆகியோரையும் அவர் நியமித்தார்.
இதைத்தொடர்ந்து தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு இந்தியா கூட்டணியை சார்ந்த உறுப்பினர்கள் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றதற்கு அரசியல் சாசனத்தின் புத்தகங்களை காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் சாசன புத்தகத்தை பிரதமர் மோடியிடம் காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இதே போன்று அரசியல் சாசன புத்தகம் காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ராகுல் காந்தி, திரிணாமுல் தலைவர் கல்யாண் பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் அகிலேஷ் யாதவ், அவதேஷ் பிரசாத் ஆகியோர் எதிர்க்கட்சி பெஞ்ச்களின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சிவராஜ் சிங் சவுகான், கிரிராஜ் சிங், சர்பானந்தா சோனோவால், பியூஷ் கோயல், ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜிஜு, மன்சுக் மாண்டவியா, பிரலாத் ஜோஷி, டாக்டர் ஜிதேந்திர சிங், ஜி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சத்தியப் பிரமாணம் செய்ய எழுந்து நின்றபோது, நீட் வினாத்தாள் கசிவு, (UG-2024), NEET (PG-2024), UGC-NET 2024 ஆகியவற்றில் ஏற்பட்டு வரும் குளறுபடிகள் குறித்து எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான எச்.டி. குமாரசாமி, சிராக் பாஸ்வான், ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, அனுப்ரியா படேல் ஆகியோரும் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உட்பட மீதமுள்ள 260 பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (நாளை) பதவியேற்க உள்ளனர். அரசியலமைப்பு புத்தகத்துடன் பதவி ஏற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக எம்பிக்கள் ராதா மோகன் சிங் மற்றும் ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆகியோர் தலைவர் குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், காங்கிரஸ் எம்பி கே சுரேஷ், திமுக எம்பி டிஆர் பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் குழு உறுப்பினர்களாக பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜூன் 26 அன்று நடைபெறும் கூட்டத்தில் மக்களவை சபாநாயர் தேர்தெடுக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் ஜூன் 27 இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுவார். ஜூலை 3 அன்று மக்களவை கூட்டம் முடிவடைகிறது.