இந்தியா

ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டி- அமேதியில் கள ஆய்வு செய்யும் ராகுல்

Published On 2024-03-02 06:05 GMT   |   Update On 2024-03-02 07:09 GMT
  • அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.
  • இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருதப்பட்டார்.

ஆனால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உத்தரபிரதே சத்தில் குறைய தொடங்கியது.

காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதோடு உத்தரபிரதேசம் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.

சோனியா காந்தியால் மட்டும் தனது ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிந்தது. இந்த நிலையில் பிரியங்கா மீண்டும் உத்தர பிரதேசம் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்த முறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாகிவிட்டார். இத னால் பிரியங்காவை ரேபரேலியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் விரும்புகிறது.

இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்ட ராகுல்காந்தி, அங்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கான அடிப்படை வேலைகளை காங்கிரசுக்காக ஒரு தனியார் நிறுவனம் அமேதியில் செய்து வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ராகுல் முடிவு செய்வார்.

உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ராகுலின் யாத்திரையில் அமேதி முக்கிய இடம் பிடித்தது. எனினும் கடந்த முறையை போல் அவர் போட்டியிடும் 2 தொகுதிகளில் ஒன்றாகவே அமேதி இருக்க வாய்ப்பு உள்ளது.

உத்தரபிரதேசத்தின் 80 பாராளுமன்ற தொகுதி களில் 17 தொகுதிகளை பெற்று சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அமேதி தேர்தல் அமைப்பாளராக ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தேவானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதியும், ரேபரேலியும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

Tags:    

Similar News