வயநாடு தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்
- பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
- நீலகிரி வந்த பிரியங்கா காந்தி கல்லூரி மாணவர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார்.
நீலகிரி வந்த பிரியங்கா காந்தி கல்லூரி மாணவர்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த மாணவர்களிடம் பிரியங்கா காந்தி புன்னகைத்தவாறு கைக்கொடுத்து சென்றார்.
பின்னர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்ற பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.
ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக வருகிற 13-ந்தேதி வயநாட்டிற்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.