ரேபரேலி தொகுதியில் பிரியங்கா-ராகுல்காந்தி சூறாவளி பிரசாரம்
- ரிமோட் கன்ட்ரோல் மூலம் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அல்ல.
- தொகுதி மக்களுடன் எங்களுக்கு குடும்ப உறவு உள்ளது.
ரேபரேலி:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ராகுல்காந்தி பற்றி கூறுகையில், ஒரு சகோதரியாக, என் சகோதரர் மகிழ்ச்சியான மனிதராக இருக்க விரும்புகிறேன். அவர் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆக்கினால் மகிழ்ச்சி அடைவீர்களா என்ற கேள்விக்கு, அது ஆட்சிக்கு வந்தால் இந்தியா கூட்டணி முடிவு செய்யும் என்று அவர் பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், `நாங்கள் இருவரும் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறோம். நான் 15 நாட்களாக இங்கே இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ரிமோட் கன்ட்ரோல் மூலம் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அல்ல என்பதால் எங்களில் யாராவது ஒருவர் இங்கு இருக்க வேண்டும்.
நாங்கள் இங்கு கடுமையாக உழைத்துள்ளோம். இந்த தொகுதி மக்களுடன் எங்களுக்கு குடும்ப உறவு உள்ளது. நாங்கள் சுற்றி இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.