இந்தியா

மரங்களை வெட்ட எதிர்ப்பு.. பழங்குடியினருக்கும் போலீசுக்கும் இடையில் வெடித்த மோதல் - வீடியோ

Published On 2024-10-18 15:57 GMT   |   Update On 2024-10-18 15:58 GMT
  • அதானி குழுமம் நிர்வகித்து வரும் பார்சா நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட உள்ளது.
  • மரங்களை வெட்டுவதை தடுக்க முயற்சிக்கும் பழங்குடியினரைக் கட்டுப்படுத்த 350 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பழங்குடியினருக்கும் போலீசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஹஸ்டியோ வனப்பகுதியில் அதானி குழுமம்  நிர்வகித்து வரும் பார்சா நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை எதிர்த்து பல மாதங்களாக அந்த வனப்பகுதியில் வசித்து வரும் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் 6 கிராமங்களில் உள்ள சுமார் 5,000 மரங்களை அகற்ற அதிகாரிகள் முயன்றுள்ளனர்.

 

இதனை எதிர்த்து நேற்றைய தினம் [ வியாழக்கிழமை] பழங்குடியினர் பெரிய அளவில் திரண்டு போராட்டம் நடத்திய நிலையில் போலீசாருக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே அதிகாரிகள் மரங்களை வெட்டும் பணியை துவங்கி உள்ள நிலையில் அங்கு வாழும் பழங்குடியினரைக் கட்டுப்படுத்த 350 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் பாஜக  அரசின் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த பார்சா நிலக்கரித் திட்டத்தின் சுரங்க பணிகளை அதானி குழுமம் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பழங்குடியினர் தாக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சதீஷ்கர் ஆளும் பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News