இந்தியா (National)

புனே விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய அவரது தாயார்- திடுக்கிடும் தகவல் அம்பலம்

Published On 2024-05-30 12:53 GMT   |   Update On 2024-05-30 12:53 GMT
  • சிறுவன் 2 பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
  • சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.

புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் சிறுவனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.

சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளார்.

இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வருகின்றனர்

இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News