புனே சொகுசு கார் விபத்து - சிறுவனின் தந்தை, தாத்தாவுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
- 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து வழக்கில் சிறுவன் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஜாமினில் வெளிவந்திருந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன. ஆனால் பொதுமக்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான். அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் இருவர் கடமை தவறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டார். கார் டிரைவர்தான் இந்த விபத்தை ஏற்படுத்தினார் என இந்த வழக்கை திசைதிருப்ப அந்த சிறுவனின் குடும்பத்தினர் சதி செய்துள்ளனர். இது தொடர்பாக டிரைவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனையடுத்து புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கண்காணிப்பு இல்லத்தில் தொடர்வது சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த சிறுவனின் காவலை அவரது தந்தை வழி அத்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், புனே சொகுசு கார் விபத்தில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா இருவருக்கும் புனே நீதிமன்றம் ஜாமினில் வழங்கியுள்ளது.