வினாத்தாள் கசிவு விவகாரம்: நீட் தேர்வு எழுதிய 4 மாணவர்கள்-பெற்றோர் உள்பட 13 பேர் கைது
- ஒரு மாணவருக்கு ரூ.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு பல தேர்வர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதியதும் தெரியவந்தது.
- தேர்வுக்கு ஒரு நாளைக்கு முன்பே சுமார் 20 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பாட்னா:
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை கடந்த 5-ந் தேதி நாடு முழுவதும் சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இந்நிலையில் ராஜஸ்தான், டெல்லி, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மாணவரை பிடித்து விசாரித்த போது, ஒரு மாணவருக்கு ரூ.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு பல தேர்வர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதியதும் தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் பீகார் போலீசார் பல்வேறு லாட்ஜூகளில் சோதனை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தேர்வுக்கு ஒரு நாளைக்கு முன்பே சுமார் 20 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த சிக்கந்தர் யாகவேந்து (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பீகாரில் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 20 மாணவர்களை ராம கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே வினாத்தாள் வழங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 4 மாணவர்களும், அவர்களது பெற்றோர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.