இந்தியா

கடைக்குள் புகுந்து சண்டை போட்ட காளைகள்- வீடியோ வைரல்

Published On 2024-07-15 09:39 GMT   |   Update On 2024-07-15 09:39 GMT
  • மிகவும் குறுகலான பாதை கொண்ட அந்த கடைக்குள் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
  • ஜவுளிகளுக்குள் அந்த பெண் ஊழியர்கள் மறைந்து நின்றதால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

நகர பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படும் பிரச்சனைகள் பூதாகரமாகி வருகிறது.

இந்நிலையில் ரிஷிகேஷின் ராம்ஜூலா பகுதியில் சமீபகாலமாக தெருக்களில் அதிகமாக கால்நடைகள் சுற்றித்திரிவதாகவும், அவை பொது மக்கள் மீது பாய்ந்து காயம் ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. ஆனால் அதனை உள்ளூர் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று இப்பகுதியில் 2 காளைகள் தெருவில் நின்று சண்டை போட்டுள்ளன. திடீரென அந்த காளைகள் சாலையோரம் இருந்த ஒரு ஜவுளி கடைக்குள் புகுந்து அங்கும் சண்டை போட்டன. அப்போது கடையில் இருந்த 2 இளம்பெண்கள் பயந்து கூச்சல் போடுகின்றனர்.

ஆனால் மிகவும் குறுகலான பாதை கொண்ட அந்த கடைக்குள் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. அப்போது சண்டை போட்ட மாடுகள் பெண் ஊழியர்கள் மீதும் பாய்ந்தன. ஆனால் ஜவுளிகளுக்குள் அந்த பெண் ஊழியர்கள் மறைந்து நின்றதால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

இதற்கிடையே பெண் ஊழியர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த வாலிபர்கள் காளைகளை அங்கிருந்து விரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பயனர்கள் பலரும் இது போன்று கால்நடைகளை தெருக்களில் திரிய விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News