இந்தியா

மாணவர்கள் மரணங்களுக்கு ஆட்சி அமைப்பின் கூட்டு தோல்வியே காரணம்- ராகுல் காந்தி

Published On 2024-07-28 09:46 GMT   |   Update On 2024-07-28 09:46 GMT
  • தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 3 மாணவர்கள் உயிரிழப்பு.
  • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.

தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 2 மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்தனர்.

இதனால் கொந்தளிப்பில் நேற்று நாளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னாள் கூடி மாணவர்கள் மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் மரணங்களுக்கு ஆட்சி அமைப்பின் கூட்டு தோல்வி என்று ராகுல் காந்தி கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை "உள்கட்டமைப்பின் கூட்டுத் தோல்வி" என்று கூறிய ராகுல் காந்தி, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறினார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் போட்டி மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சில நாட்களுக்கு முன், மழையின்போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்தார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்கட்டமைப்பின் இந்த சரிவு அமைப்பின் கூட்டு தோல்வியாகும்.

பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத் திட்டமிடல், நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை என ஒவ்வொரு நிலையிலும் சாமானியக் குடிமகன் தன் உயிரை இழப்பதன் மூலம் விலை கொடுத்து வருகிறார்.

பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை ஒவ்வொரு குடிமகனின் உரிமை மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News