பட்டியலினத்தவரின் வீட்டில் உணவு சமைத்த ராகுல் காந்தி - வீடியோ வைரல்
- பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்தார்.
- இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து அவர்களுடன் சேர்ந்து உணவு சமைக்க உதவி செய்து பின்னர் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி அவரது பதிவில், இன்றும் தலித் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும். ஷாஹு படோலே ஜி கூறியது போல், தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள், அதன் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி, அஜய் துக்காராம் சனடே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோருடன் ஒரு மதியம் செலவிட்டேன்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை மிகுந்த மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு அவர் வாய்ப்பு அளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து 'ஹர்பர்யாச்சி பாஜி', கொண்டைக்கடலை, கீரைகள் மற்றும் கத்திரிக்காயுடன் துவர் பருப்பு ஆகியவற்றைச் செய்தோம்.
படோல் ஜி மற்றும் சனடே குடும்பத்தின் சாதி மற்றும் பாகுபாடு பற்றிய தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி பேசுகையில், தலித் உணவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் இந்த கலாச்சாரத்தின் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றி விவாதித்தோம்.
அரசியலமைப்பு சட்டம் பகுஜன்களுக்கு பங்கேற்பையும் உரிமைகளையும் வழங்குகிறது. அந்த அரசியலமைப்பை நாங்கள் பாதுகாப்போம். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் சகோதரத்துவ உணர்வோடு முயற்சி செய்தால் மட்டுமே சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கியும் சமத்துவம் சாத்தியமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.