ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி
- உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
- ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை களம் இறக்க வேண்டும் என்று அந்த தொகுதி காங்கிரசாரும், நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.
அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
வருகிற 7-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், 13-ந்தேதி 4-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், 20-ந்தேதி 5-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்து விட்ட காங்கிரஸ் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் வைத்திருந்தது.
உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த இரு தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்ததால் பாரதிய ஜனதாவும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதப்படுத்தியது. அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியானதால் இந்த இரு தொகுதி வேட்பாளர்கள் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
வயநாடு தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் ராகுல் அமேதியில் போட்டியிட தயக்கம் தெரிவித்தார். மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அங்கு ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த தொகுதிக்கு அவர் செய்துள்ள நலத்திட்டங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இதனால் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா? என்பதில் ராகுலுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர் அங்கு போட்டியிட தொடர்ந்து தயக்கம் தெரிவித்ததால் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டது.
இதற்கிடையே ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை களம் இறக்க வேண்டும் என்று அந்த தொகுதி காங்கிரசாரும், நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அங்கு பிரியங்காவை போட்டியிட வைக்க ராகுல் காந்திக்கு விருப்பம் இல்லை. ஒரே குடும்பத்தில் 3 பேர் (சோனியா, ராகுல், பிரியங்கா) எம்.பி.யாக இருந்தால் பாரதிய ஜனதா மிக மிக கடுமையாக விமர்சனம் செய்யும் என்று ராகுல் கருத்து தெரிவித்தார்.
இதன் காரணமாக ரேபரேலி தொகுதியில் போட்டியிடாமல் பிரியங்கா ஒதுங்கினார். இந்த நிலையில் அவரது கணவர் ராபர்ட் வதேரா தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையையும் சோனியா, ராகுல் இருவரும் சேர்ந்து நிராகரித்தனர்.
இதனால் ரேபரேலி தொகுதியில் களம் இறங்கப் போவது யார்? என்பதில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன்தினம் இது தொடர்பாக சோனியாவுடன் பேசினார். ராகுல் வயநாட்டில் மட்டும் போட்டியிட்டால் வடமாநிலங்களை கைவிட்டது போல் ஆகி விடும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இருந்து ராகுல் பயந்து செல்வதாக பாரதிய ஜனதா பிரசாரம் செய்யும் என்று கார்கே விளக்கம் அளித்தார்.
அதன் அடிப்படையில் சோனியா தொலைபேசி மூலம் ராகுலிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகுதான் ராகுல் மனதில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கு பதில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதை காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில் நேற்று நள்ளிரவு வரை இழுபறி நிலவியது. சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதை அறிந்ததும் ரேபரேலி தொகுதி காங்கிரசார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.