இந்தியா

அசுத்தமான கழிப்பறை: ரெயில் பயணிக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-11-01 02:34 GMT   |   Update On 2024-11-01 02:34 GMT
  • துவ்வாடாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
  • விசாகப்பட்டினத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.

திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா வரையிலான ரெயில் பயணத்தின் போது 55 வயது நபரும் அவரது குடும்பத்தினரும் கடும் சிரமத்திற்கு ஆளானதால் அவருக்கு இழப்பீடாக 30,000 ரூபாய் வழங்குமாறு இந்திய ரெயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் மூர்த்தி என்பவர் 4 ஏ.சி. டிக்கெட்டுகளை பதிவு செய்து பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது அவர்களின் பெட்டியில் ஏர் கண்டிஷன் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் கழிப்பறை அசுத்தமாகவும், தண்ணீரும் வரவில்லை. பயணம் முழுவதும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் சிரமங்களை எதிர்கொண்டு பயணம் மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து துவ்வாடாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, குற்றச்சாட்டை மறுத்த ரெயில்வேதுறை, பொய்யான குற்றச்சாட்டை மூர்த்தி கூறியுள்ளதாகவும், ரெயில்வே வழங்கிய சேவைகளைப் பயன்படுத்தி மூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டதாகவும் கூறியது.

இருப்பினும், நுகர்வோர் நீதிமன்றம், புகாரைப் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அதைப் பார்வையிடவில்லை என்றும் கழிப்பறைகளுக்கு நீர் தடைபட்டதைக் கண்டறிந்ததாகவும் தெரியவந்தது. இதனால் குறைந்தபட்ச வசதிகளைக் கூட சரிபார்க்காமல் பிளாட்பாரத்தில் ரெயில் நிறுத்தப்பட்டதை நிரூபித்த நீதிமன்றம், திருப்பதியில் இருந்து துவ்வாடா (வைசாக் மாவட்டம்) செல்லும் போது ஏற்பட்ட சிரமத்திற்காக மூர்த்திக்கு 25,000 இழப்பீடு வழங்க ரெயில்வேக்கு உத்தரவிட்டது. வழக்கிற்கு ஏற்பட்ட செலவுகளுக்காக ஈடுகட்ட கூடுதலாக 5,000 என மொத்தம் ரூ.30,000 வழங்க உத்தரவிட்டது.

Tags:    

Similar News