வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. ரெட் அலெர்ட்-ஐ தொடர்ந்து மும்பை காவல் துறை எச்சரிக்கை
- காவல் துறை சார்பில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
- 24 மணி நேரத்தில் மட்டும் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மும்பையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று காவல் துறை வலியுறுத்தி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து காவல் துறை சார்பில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைவாசிகள் வீடுகளிலேயே இருக்க கேட்டுக் கொள்கிறோம். ஏதேனும் அவசர உதவிகளுக்கு 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் என மும்பை காவல் துறை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அருகாமை விமான நிலையங்களில் இருந்து மும்பை வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளில் 90 மில்லிமீட்டர்களும் பதிவாகி உள்ளது.
இதுதவிர கனமழை காரணமாக பூனேவில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். இருவர் தானேவில் உள்ள பார்வி அணையில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்தனர்.