ரத்தன் டாடா பெயரில் பல்கலைக்கழகம் - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
- ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
- அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி இப்பல்கலைக்கழகம் இனிமேல் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும்.