இந்தியா

பொருளாதார சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது: ஆர்.பி.ஐ. கவர்னர்

Published On 2023-08-10 06:11 GMT   |   Update On 2023-08-10 06:11 GMT
  • தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது
  • உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும்

இந்தியாவில் உள்ள வங்கிகளின் கையிருப்பில் போதிய அளவு பணம் இல்லையென்றால் மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடனாக பணத்தை பெறலாம்.

இதற்காக அவ்வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) அளிக்க வேண்டிய வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார சூழ்நிலை உட்பட பல காரணிகளை கொண்டு தீர்மானிக்க படுக்கிறது. இதனை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டியின் (Monetary Policy Committee) வல்லுனர்கள் முடிவெடுத்து ஆர்பிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள்.

ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்த கமிட்டியின் சந்திப்பு ஆகஸ்ட் 8 முதல் 10 வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின்படி ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை (Repo rate) எந்த மாற்றமுமில்லாமல் 6.5 சதவீதத்திலேயே வைத்துள்ளது.

சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவிலேயே வைத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

இதனை அறிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-

விவசாய கடன்களில் உயர்வு வளர்ச்சியை குறிக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தின் வேகம் நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது.

உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும். ஆனால், உலகளவில் வளர்ச்சி என்பது குறைவதற்கான ஆபத்தும் அதிகம். பணவீக்கத்தின் போக்கை கூர்மையாக கவனித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.

முன்னர் அதிகரித்திருந்த ரெப்போ வட்டி விகிதத்தின் தாக்கம் இப்போது பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியா விரைவில் மாறும். உலகின் பொருளாதார வளர்ச்சியில் 15 சதவீதம் இந்தியா வழங்குகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரியில், அதற்கு முன்பு வரை 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் என உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News