இந்தியா

கைதான செம்மரக்கடத்தல் கும்பல்

திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்திய 13 பேர் கைது

Published On 2023-04-23 08:13 GMT   |   Update On 2023-04-23 08:13 GMT
  • தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர்.
  • கடத்தப்பட்ட செம்மரங்கள் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பாக்ராபேட்டை இன்ஸ்பெக்டர் துளசிராம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது எர்ரகுண்டபாளயம் வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் செம்மரம் வெட்டி கடத்தி செல்வது தெரிய வந்தது.

இந்த காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த கடத்தல்காரர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதில் காரில் இருந்த 21 செம்மரங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த சங்கர் செம்மரக்கடத்தல் கும்பல் தலைவராவார். இவர் மீது 30 வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைக்கு சென்று வந்த பிறகும் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளான்.

தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் செம்மரங்களை வேலூரை சேர்ந்த காஞ்சி என்கிற சந்தோஷ் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தசாமிக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட செம்மரங்கள் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. சந்தோஷ் மற்றும் கோவிந்தசாமியும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக செம்மரங்களை வெட்டுவதற்கு கூலி தொழிலாளர்களை பஸ்கள் மற்றும் லாரிகளில் அழைத்து வருவது வழக்கம்.

ஆனால் போலீசார் சோதனை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து பைக்கில் கூலி தொழிலாளர்களை அழைத்து வந்து செம்மரங்களை வெட்டி செல்வது தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 21 செம்மரக்கட்டைகள் மற்றும் ஒரு கார், 6 பைக்குகள் ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. பரமேஸ்வர் தெரிவித்தார்.

Tags:    

Similar News