என் மேல் சிறுநீர் கழித்தவரை விடுதலை செய்யுங்கள்: பழங்குடியின வாலிபர் கோரிக்கை
- பிரவேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டார்.
- அவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பண்டிட்
போபால் :
மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தை சேர்ந்த தஸ்மத் ராவத் என்ற பழங்குடியின வாலிபர் மீது மற்றொரு பிரிவை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து பிரவேஷ் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பழங்குடியின வாலிபர் தஸ்மத் ராவத்தை முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது வீட்டுக்கு வரவழைத்து, கால்களை கழுவி மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிரவேஷ் சுக்லாவை விடுதலை செய்யுமாறு தஸ்மத் ராவத் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஒரு தவறு நடந்து விட்டது. பிரவேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டார். எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசுக்கு எனது கோரிக்கை ஆகும்' என தெரிவித்தார்.
பிரவேஷ் சுக்லா, மிகவும் கீழ்த்தரமான செயலை செய்திருக்கிறாரே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'ஆம். நான் ஒத்துக்கொள்கிறேன். அவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பண்டிட். அவரை விடுவிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்.