இந்தியா

பண்டிட் ஜவகர்லால் நேரு - ஒரு பார்வை

Published On 2023-11-14 10:02 GMT   |   Update On 2023-11-14 13:52 GMT
  • தேச விடுதலைக்காக இந்து-முஸ்லீம் ஒற்றுமை அவசியம் என வலியுறுத்தி வந்தார்
  • நவீன இந்தியாவின் சிற்பி என பாராட்டப்பட்டவர் பண்டிட் நேரு

இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய தேசிய தலைவர்களில் முக்கியமானவர், பண்டிட் ஜவகர்லால் நேரு.

1889ல், இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலகட்டத்தில், உத்தர பிரதேச மாநில பிரயாக்ராஜ் (அப்போதைய அலகாபாத்) பகுதியில், மோதிலால் நேருவிற்கும், ஸ்வரூப் ராணி நேருவிற்கும் மகனாக பிறந்தவர் நேரு.

இங்கிலாந்தில் சட்டக்கல்வி படித்த நேரு, 1912ல் இந்தியாவிற்கு திரும்பினார்.

1916ல் கமலா கவுல் என்பவரை நேரு மணந்தார். இவர்களின் ஒரே மகள், இந்திரா காந்தி பின்னாளில் இந்திய பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறந்த தேசியவாதியான நேரு, இந்திய விடுதலைக்காக போராடினார். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்ட அவர், வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதிலும், தேச விடுதலைக்காகவும், இரு மதத்தினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சமகால சுதந்திர போராட்ட தலைவரான 'மகாத்மா' என்றும் 'தேசப்பிதா' என்றும் மக்களால் அழைக்கப்பட்ட மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த நேரு, அவரது அகிம்சை கோட்பாடுகளில் முழு நம்பிக்கை கொண்டவராக இருந்தார். நாட்டின் விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம் (non-cooperation movement) உட்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 8 வருட காலம் (3052 நாட்கள்) சிறை சென்றவர், நேரு.


நேரு, தனது பதவி காலத்தில் ராணுவம், வெளியுறவுத்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை கைவசம் வைத்திருந்து திறம்பட கையாண்டவர். 16 வருட காலம் பிரதமராக பதவி வகித்து "இந்தியாவில் நீண்ட காலம் பதவியில் இருந்த பிரதமர்" எனும் பெருமையை பெற்றவர் நேரு.

"வேற்றுமையில் ஒற்றுமை" (university in diversity) எனும் கோட்பாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்ததாலும், விஞ்ஞானத்தின் மீது தீவிர ஈடுபாடு இருந்ததாலும், வாழ்நாள் முழுவதும் பழமைவாத சித்தாந்தங்களிலிருந்து விலகி இருந்தார்.

"நவீன இந்தியாவின் சிற்பி" (architect of modern India) என அழைக்கப்பட்ட நேரு, தொழிற்சாலைகளை அமைப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இன்று நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலைத்திருக்கும் பல தொழிற்சாலைகள் நேருவின் முயற்சியால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சட்டையில், பொத்தானுக்கு அருகே தினமும் ஒரு ரோஜா மலரை விரும்பி அணிந்து வரும் பழக்கம் கொண்டிருந்ததால், நேரு "ரோஜாவின் ராஜா" என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947ல் பதவி ஏற்ற நேரு, தனது பதவிக்காலத்திலேயே,1964 மே 27 அன்று மறைந்தார்.


குழந்தைகள் நலனை மையமாக வைத்தே ஒரு நாட்டின் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என நம்பிய நேரு, ஓய்வு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதை வழக்கமாக கொண்டவர். அவரது பிறந்த தினமான நவம்பர் 14, ஒவ்வொரு வருடமும் "தேசிய குழந்தைகள் தினம்" (National Children's Day) என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Tags:    

Similar News