ஆந்திராவில் பயங்கர பீதி... திடீர் திடீரென பற்றி எரியும் வீடுகள்
- பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர்.
- கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலத்தில் கொத்தாசனம்பட்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
மேலும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு அருகில் வைக்கோல்களை தனியாக அடுக்கி வைத்துள்ளனர்.
பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்ட வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
மேலும் விவசாய நிலத்தில் இருந்த வைக்கோல்களும் பற்றி எரிந்தன. ஆனால் இவற்றிற்கு யாரும் தீ வைத்ததாக தெரியவில்லை. திடீர் திடீரென வீடுகளில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்குள்ள கோவிலில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விளக்கேற்றி பரிகார பூஜை செய்தனர்.
அதற்கு பிறகும் பூட்டிய வீடுகள் தீ பிடித்து எரிந்தது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு செய்தனர்.
அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வகத்தின் அறிக்கை வந்தவுடன் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவரும் என திருப்பதி கலெக்டர் கூறினார்.
இதுகுறித்து சந்திரகிரி செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி எம்.எல்.ஏ கூறுகையில், தீ விபத்துகளின் மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம். காரணம் விரைவில் தெரியவரும். அடுத்து என்ன செய்வது என்று பார்ப்போம். ஆங்காங்கே எரியும் தீ பற்றி வரும் கட்டுக்கதைகள், வதந்திகளை நம்பாதீர்கள், அதற்கான காரணங்கள் விரைவில் தெரிய வரும், வேறு கிராமத்தில் இப்படி நடக்காமல் கவனமாக இருப்போம்.
மாவட்ட வருவாய் அலுவலர் கனக நரசா ரெட்டி, சுற்றுச்சூழல் பேராசிரியர் தாமோதர், தீயணைப்பு அலுவலர் ரமணய்யா, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி தீ விபத்து எரிவது குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.