முன்பதிவு கட்டாயம்: 1-ந்தேதி முதல் கவர்னர் மாளிகையில் சுற்றுலாவிற்கு அனுமதி
- rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
- காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது.
மும்பை :
மும்பை மலபார்ஹில் பகுதியில் மராட்டிய கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ்பவன் என்ற கவர்னர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையில் பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 4 மாத பருவமழை முடிவுக்கு வருவதை தொடர்ந்து மீண்டும் கவர்னர் மாளிகைக்கு சுற்றுலா பயணிகளுக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கவர்னர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
பருவமழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டு உள்ளது. எனவே வருகிற 1-ந் தேதி முதல் பயணிகள் வருகை தரலாம்.
கவர்னர் மாளிகையைில் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். வாரத்தின் திங்கட்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதைத்தவிர தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்ததேதி வரை கவர்னர் மாளிகைக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதால் அன்றைய தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
கவர்னர் மாளிகையில் சூரிய உதயம், தேவி கோவில், பதுங்கு குழிகள், புரட்சியாளர்களின் கேலரி, தர்பார் அரங்கு, ஜல் விகார் மற்றும் மராட்டிய மாநிலத்தின் உருவாக்கத்தின் நினைவகம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.