செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரிப்பு
- சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவாக நிர்ணயம்
- பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5.9 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
புதுடெல்லி:
செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில், இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 7.0 சதவிகிதமாக இருந்தது.
சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆனால், அந்த அளவை விட சில்லறை பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5.9 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. ஆனாலும், சில்லறை பணவீக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மேலும் சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி வரும் மாதங்களில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்வே சில்லறை பணவீக்கம் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது.