மேற்குவங்காள அரசுக்கு 3 நாட்கள் கெடு- போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் அறிவிப்பு
- பொதுமக்களின் கவலையின் காரணமாக, நாங்கள் எங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டோம்.
- வேலை நிறுத்தத்தின்போது நோயாளிகளுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்டார்.
அதற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து, 42 நாட்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு கடந்த மாதம் 21-ந் தேதி பயிற்சி டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால் மாநில அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இதனையடுத்து, பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், மாநில சுகாதார செயலாளரை மாற்ற வேண்டும், பணியிடங்களில் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி டாக்டர்களில் சிலர் கடந்த 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் மேடை அமைத்து 8 பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் நேற்று 15-வது நாளை எட்டியது.
இதனிடையே உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் பயிற்சி டாக்டர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மேற்குவங்காள அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்துள்ளனர். தவறும்பட்சத்தில் வருகிற 22-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவரும், மேற்கு வங்காள பயிற்சி டாக்டர்கள் முன்னணியின் செய்தித் தொடர்பாளருமான டாக்டர் தேபாஷிஷ் ஹல்தார் கூறியதாவது:-
பொதுமக்களின் கவலையின் காரணமாக, நாங்கள் எங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டோம். அதற்கு பதிலாக, சுகாதார அமைப்பை மேம்படுத்த எங்கள் சொந்த உயிரை பணயம் வைத்துள்ளோம். ஆனால் கடந்த 14 நாட்களாக, அரசாங்கம் அசையாமல் உள்ளது.
எனவே, விவாதத்தில் ஈடுபடவும், அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசுக்கு நாங்கள் 3 நாட்கள் கெடு விதிக்கிறோம்.
அரசு அதை செய்ய தவறும் பட்சத்தில் 22-ந்தேதி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட அனைத்து சுகாதார நிலையங்களில் பொது சுகாதார வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
இந்த வேலை நிறுத்தத்தின்போது நோயாளிகளுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் தேபாஷிஷ் ஹல்தார் கூறினார்.
இந்த நிலையில் பயிற்சி டாக்டர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நாளை (திங்கட்கிழமை) அவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாநில தலைமை செயலாளர் மனோஜ் பந்த், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்களை நேற்று மதியம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்-மந்திரி பானர்ஜி டாக்டர்களிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அது சுகாதார சேவைகளை பாதிக்கக் கூடாது. உங்கள் கோரிக்கைகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற எனக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் அவகாசம் கொடுங்கள். தயவு செய்து போராட்டத்தை வாபஸ் பெறுங்கள். சில கோரிக்கைகளுக்கு கொள்கை முடிவுகள் தேவை. நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.