இந்தியா (National)

நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்: டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

Published On 2024-10-08 02:38 GMT   |   Update On 2024-10-08 02:38 GMT
  • பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் உண்ணாவிரதம்.
  • மேற்கு வங்கத்தில் உள்ள எங்கள் சக ஊழியர்களுக்கு ஒற்றுமையாக நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பெண் டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநில அரசுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கொல்கத்தா ஜூனியர் டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக டாக்டர்கள் சங்கம் (Federation of All India Medical Association (FAIMA)) அறிவித்தள்ளது.

"நாங்கள் மேற்கு வங்க ஜூனியர் டாக்டர்கள் முன்னணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம், எங்கள் நிலைப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளோம். விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் உள்ள எங்கள் சக ஊழியர்களுக்கு ஒற்றுமையாக நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்." என அனைத்திந்திய மெடிக்கல் அசோசியேசன் பெடரேசன் தலைவர் சவ்ரங்கர் தத்தா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம 9-ந்தேதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

சுமார் 42 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்குப் பிறகு தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News