இந்தியா

சீன விமானங்களை தடை செய்யவேண்டும்- பெரும்பான்மை இந்தியர்கள் கருத்து

Published On 2022-12-21 13:42 GMT   |   Update On 2022-12-21 13:42 GMT
  • சீன விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
  • சீனாவில் அதிகரித்து வரும் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என டாக்டர் சங்கீதா ரெட்டி கூறுகிறார்

புதுடெல்லி:

சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்போது சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப்-7 ஒமைக்ரான் இந்தியாவிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே சீனா-இந்தியா இடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும், இந்தியாவில் இருந்து சீனா செல்லும் விமானங்களுக்கும் தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பரவும் தொற்று மற்றும் இந்தியாவில் ஒரு புதிய ஆபத்தான கொரோனா திரிபு பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றும் மணீஷ் திவாரி யோசனை கூறி உள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி கூறுகையில், 'சீனாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானப் பயணம் தொடர்பான நமது கொள்கையின் மீது அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்' என்றார். 'பயனுள்ள தடுப்பூசிகளுடன் இந்தியாவில் விரிவான தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்படுவதால், சீனாவில் அதிகரித்து வரும் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. இருப்பினும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது' என்றும் டாக்டர் சங்கீதா ரெட்டி கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தபோதும், சீன விமானங்கள் இந்தியாவுக்கு வருவது தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பான்மையான இந்தியர்கள் கூறி உள்ளனர். சமூக நலன் சார்ந்த லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற வலைத்தளம் நடத்திய சர்வேயில், சீன விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று 10-ல் 7 இந்தியர்கள் (71 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News