இந்தியா

எம்.பி.க்களுடன் அமர வைக்கப்பட்ட கூட்டணி கட்சி தலைவர்: அவமதிப்பு என காங்கிரஸ், சமாஜ்வாதி விமர்சனம்

Published On 2024-06-07 14:54 GMT   |   Update On 2024-06-07 14:55 GMT
  • விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
  • பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும்.- காங்கிரஸ் தலைவர்.

மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.பி.க்கள் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைக்க இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை பாராளுமன்றத்திற்கான அக்கூட்டணியின் தலைவராக தேர்வு செய்தனர். இதற்கான கூட்டம் பழைய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்தனர். ஆனால் உத்தர பிரதேசத்தில் இரண்டு எம்.பி.க்களை கொண்டு ராஷ்டிர லோக் தளம் கட்சி தலைவரும் ஜெயந்த் சவுத்ரி எம்.பி.க்களுடன் அமர்ந்திருந்தார். இவர் முன்னாள் பிரதமர் சரண் சிங் சவுத்ரியின் பேரன் ஆவார்.

எம்.பி.க்களுடன் அமர வைத்து ஜெயந்த் சவுத்ரியை அவமதித்துள்ளது என பாஜக மீது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது. அதேவேளையில் இது ஒரு பெரிய விசயம் அல்ல என ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய்

இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் கூறுகையில் "மேடையில் இடம் வழங்காதது மூலம் சிறந்த விவசாயிகளுக்கான சிறந்த தலைவரின் (சரண் சிங் சவுத்ரி) பேரனை இழிவுப்படுத்துவதாகும். விவசாயிகளை பயங்கரவாதிகள் மற்றும் துரோகிகள் என அழைத்து அதே கட்சிதான் பாஜக.

விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சமாஜ்வாதி கட்சியில் அவர் மிகப்பெரிய அவரில் மதிக்கப்பட்டார். அவருடைய சுய மரியாதைக்காகவும், விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பதற்காகவும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக வேண்டும்.

இந்தியா கூட்டணிக்கு வர விரும்பும் ஒவ்வொருவரையும் வரவேற்க தயாராக இருக்கிறோம். அகிலேஷ் யாதவிடம் யாரெல்லாம் செல்கிறார்களோ, அவர்களை இரண்டு கைகளை விரித்து வரவேற்பார்" என்றார்.

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் அஜய் ராய் கூறுகையில் "பாஜக கூட்டணி கட்சி தலைவரை அவமதித்துள்ளது. பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும். அவர்களுடைய கட்சியில் இணையும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பெரிய மாலை போடுவார்கள். பின்னர் அவமதிப்பார்கள்" என்றார்.

ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார்

இதற்கு ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார் பதில் அளித்து கூறியதாவது:-

இந்தியா கூட்டணி எப்போது எங்களுக்கு மரியாதை கொடுத்தது? ஒருவர் மேலே அமர்ந்தாலும் கீழே அமர்ந்தாலும் பெரிய விஷயம் இல்லை. பரந்த மனதுடன் அரசியல் செய்ய வேண்டும். சிறிய விஷயங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது. எங்கள் கட்சி என்.டி.ஏ.-வின் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாகும். தொடர்ந்து அதனுடன் இருக்கும்.

இவ்வாறு அனில் குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News