ரவுடி சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு.. கொலை வழக்கில் ஜாமீன்
- மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
- இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.