மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.1,100 கோடி மோசடி-அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
- கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார்.
- முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு
புதுடெல்லி:
டெல்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கவிதாவுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிபதி கவேரி பேவேஜா முன்னிலையில் அமலாக்கத் துறையால் (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வின்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட கவிதாவின் காவலையும் நீதிபதி நீட்டித்தார்.
அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.1,100 கோடிக்கும் மேல் பணமோசடி நடந்துள்ளது. இதில் வழக்கில் சிக்கிய 'இண்டோஸ் பிரிட்ஸ்' நிறுவனம் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு கையூட்டாக தந்த ரூ.100 கோடி, நிறுவனம்தின் லாபமாக பதிவு செய்யப்பட்டுள்ள ரூ.192.8 கோடி என மொத்தம் ரூ.292.8 கோடி கவிதாவுக்குத் தொடர்புடையதாகும்.
வழக்கில் உள்ள தொடர்புகள் மற்றும் தனது ஈடுபாட்டை மறைப்பதற்கு, கைப்பேசிகளில் இருந்த எண்ம ஆதாரங்களை கவிதா அழித்துள்ளார். கைப்பேசியிலுள்ள தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை' எனக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.