இந்தியா

கைதான செம்மரம் கடத்தல் கும்பல்

காரில் கடத்திய ரூ.19 லட்சம் செம்மரம் பறிமுதல்- தமிழகத்தை சேர்ந்த 8 பேர் கைது

Published On 2022-06-21 05:09 GMT   |   Update On 2022-06-21 05:09 GMT
  • பாப்பிரெட்டி, கரிபள்ளி, முடியம்வாரி பள்ளி சாலை சந்திப்புகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • போலீசார் 12 செம்மரங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அன்னமைய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷவர்தன் ராஜு உத்தரவின்பேரில் வால்மீகி புரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் பாப்பிரெட்டி, கரிபள்ளி, முடியம்வாரி பள்ளி சாலை சந்திப்புகளில் போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தீ கண்டு பள்ளி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் போலீசார் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க பைக்குகளில் வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு செம்மரம் ஏற்றப்பட்ட வாகனங்களில் இருந்த தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி, மதியழகன், பாஸ்கர், ஏழுமலை, மகேந்திரன், ஜெயச்சந்திரன், மஞ்சுநாத், சூர்யா ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

மேலும் 12 செம்மரங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார், 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு ரூ.19 லட்சம் மற்றும் வாகனங்களில் மதிப்பு 40 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News