வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: சத்தீஷ்காா் பட்ஜெட்டில் அறிவிப்பு
- சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ராய்ப்பூர் :
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கரில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட்டின் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:-
* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையிலான வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரு.2,500 உதவி தொகை வழங்கப்படும்.
* ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.3,250-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், ரூ.6,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.