மாநிலங்களவையில் இருந்து அவைத்தலைவர் வெளிநடப்பு: என்ன காரணம்?
- எதிர்க்கட்சியினர் நடவடிக்கைக்கு மாநிலங்களவை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்தார்.
- இதையடுத்து, மாநிலங்களவையில் இருந்து ஜெகதீப் தன்கர் வெளியேறினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று காலை கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி தரவில்லை.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் எழுந்து இன்னும் சில பிரச்சனைகளை எழுப்பினார். இதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
அப்போது டெரிக் ஓ பிரையனை எச்சரித்த ஜெகதீப் தன்கர், நீங்கள் அவைத்தலைவரை நோக்கி சத்தம் போடுகிறீர்கள். அவையில் உங்கள் நடவடிக்கை மோசமாக உள்ளது. உங்கள் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அடுத்த முறை வாசல் கதவை காட்டுகிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சியினர் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஜக்தீப் தங்கர், சில நேரங்களில் நான் இங்கு அமர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அவையை விட்டு கனத்த மனதுடன் வெளியேறுகிறேன் எனக்கூறி அவையில் இருந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து, அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் மாநிலங்களவையை நடத்தினார்.