தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் பாதுகாப்பு குளறுபடி: டிம்பிள் யாதவ் குற்றச்சாட்டு
- மக்களவையில் 2 பேர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
- இதேபோல் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் 2 பேர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர். ஒருவர் சபாநாயகரை நோக்கி ஓடினார். இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் எம்.பி.க்கள் பதற்றம் அடைந்து ஓட ஆரம்பித்தனர்.
அதன்பின், பாதுகாவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். இந்த பரபரப்பு சம்பவத்தால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியேயும் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், இதுகுறித்து சமாஜ்வாடி எம்பி டிம்பிள் யாதவ் கூறுகையில், தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் பாதுகாப்பு குளறுபடி காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
கடந்த 2001ல் பாராளுமன்றம் மீது நடந்த தாக்குதலில் 14 போலீசார் வீர மரணம் அடைந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.