இந்தியா

தன்பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்க கோரிய வழக்கு: மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள்

Published On 2023-10-17 06:49 GMT   |   Update On 2023-10-17 06:49 GMT
  • தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.
  • இந்தத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

புதுடெல்லி:

தன்பாலின ஈர்ப்பாளர்கள் உலகெங்கும் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

இதன்பின் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது. எனவே இந்த வழக்கிற்கான விசாரணை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பிற்கு எதிரானது என்று தொடர்ந்து கூறி வருகின்றது. மேலும், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டும் நடைபெறுவது என்று வாதிட்டது.

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சய் கிஷன், ரவீந்திர பட் , ஹமா கோஹ்லி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

இந்நிலையில், தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியது.

இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

இந்த வழக்கில் 4 விதமான தீர்ப்புகள் வந்துள்ளன.

திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க பாராளுமன்றத்தையோ, சட்டசபையையோ கட்டாயப்படுத்த முடியாது.

நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால், சட்டத்தின் ஷரத்துகளை கையாள முடியும்.

சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை பாராளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

தன்பாலின திருமணம் என்பது வசதி படைத்தவர்கள் இடையே மட்டும் காணப்படுவது அல்ல.

சிறப்பு திருமணச் சட்டத்தை ரத்து செய்தால் நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும்.

தன்பாலின இணையர்களால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை.

தன்பாலின திருமணங்களுக்கு சட்ட உரிமையை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழங்க முடியாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News