பிரதமர் மோடி ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு தடை விதிக்க இதுதான் காரணம்: சஞ்சய் ராவத்
- கர்நாடகத்தில் அதிகளவில் கோவில்கள் உள்ளன.
- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.
மும்பை :
ரூ.2 ஆயிரம் நோட்டு தடை முடிவு குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் பதிலளித்து கூறியதாவது:-
கர்நாடகம் ஒரு முக்கியமான தென் மாநிலம். அங்குள்ள மக்கள் பல்வேறு நம்பிக்கை கொண்ட பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். கர்நாடகத்தில் அதிகளவில் கோவில்கள் உள்ளன. மக்கள் தங்கள் நம்பிக்கையையோ, மத விருப்பத்தையோ மறைக்க மாட்டார்கள். இருந்தபோதிலும், கர்நாடக மக்கள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜனதாவை நிராகரித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது. அதை ஏற்றுக்கொள்வதில் பா.ஜனதாவுக்கு ஏன் இவ்வளவு சிரமம் என்று தெரியவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ள பா.ஜனதா கற்றுக்கொள்ள வேண்டும்.
பா.ஜனதா அல்லது பிரதமர் மோடி மீது எதிர்மறை உணர்வுகள் வெளிப்படும்போது, அவற்றை நீர்த்து போகச் செய்ய சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்பட்ட முடிவு தான் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற்றது ஆகும். பிரதமர் மோடி தன்னிச்சையான முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.