அரியானா முதல்வர் பதவிக்கு ஏகப்பட்ட சண்டை: சில தினங்களில் மாற்றப்படலாம்- ஆம் ஆத்மி மந்திரி சொல்கிறார்
- அரியானா மாநில முதல்வர் பதவிக்கு பா.ஜ.க.வில் சண்டை நடைபெற்றது.
- தற்போது இந்த சண்டை எப்படியோ சமாளிக்கப்பட்டு நயாப் சிங் சைனி முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற்றது. ஏற்கனவே முதல்வராக இருக்கும் நயாப் சிங் சைனி 2-வது முறையாக இன்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் பா.ஜ.க.-வில் முதல்வர் பதவிக்கு சண்டை நடைபெற்று வருவதாகவும், சில தினங்களில் முதல்வர் மாற்றப்படலாம் எனவும் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:-
தசரா நாளில் அரியானா மாநில முதல்வராக நயாப் சிங் சைனி பதவி ஏற்கும் விழா நடக்கிறது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பா.ஜ.க.வில் ஏராளமான சண்டைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சண்டை எப்படியோ சமாளிக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழா நடந்துள்ளது. ஆனால், அரியானா முதல்வர் இன்னும் நில நாட்களில் மாற்றப்படுவார்.
இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பதவி ஏற்ற நயாப் சிங் சைனி, அரசு மீது நம்பிக்கை வைத்த அரியானா மாநில மக்களுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.