இந்தியா

ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை கேட்ட வழக்கு தள்ளுபடி

Published On 2023-04-28 23:42 GMT   |   Update On 2023-04-28 23:42 GMT
  • ரெயில்களில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது.
  • கொரோனா காலத்தில் அவர்களுக்கான ரெயில் கட்டணச் சலுகையை ரெயில்வே நிறுத்திவிட்டது.

புதுடெல்லி:

இந்தியாவில் ரெயில்களில் பயணம் செய்வதற்கு மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் கொரோனா தொற்று காலத்தில் வைரஸ் தொற்றைத் தடுக்க மூத்த குடிமக்களின் பயணங்களைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கான ரெயில் கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா தொற்றில் இருந்து நாடு மீண்டு வந்துவிட்ட நிலையில், மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று உரத்த குரல் எழுந்தது.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எம்.கே.பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அசனுதீன் அமானுல்லா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் கோர்ட்டு உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமாக இருக்காது. மூத்த குடிமக்களின் தேவைகளையும், நிதி விளைவுகளையும் கருத்தில் கொண்டு, அரசுதான் இதில் முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News