பெண் டாக்டரின் பெயர், புகைப்படத்தை நீக்க விக்கிபீடியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்த கூடாது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது.
செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை விக்கிபீடியா இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்த கூடாது இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, சமூக வலைத்தளங்களில் பரவிய பெண் மருத்துவரின் பெயர், புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.