மணிப்பூரில் ஆலங்கட்டி மழை- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.
- அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மணிப்பூரின் பல பகுதிகளில் கனமழை, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இம்பாலின் மேற்கில் உள்ள காஞ்சிப்பூர் மற்றும் தேரா ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்தன. பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.
இந்நிலையில், மணிப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் நிலவும் வானிலை காரணமாக 2024 மே 6 மற்றும் மே 7ம் தேதிகள் அன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். தற்போதைய வானிலையால் ஏற்படும் அபாயங்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,"அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசு உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது," என்றார்.