தமிழகம் வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட போதை பொருள் பறிமுதல்- 7 பேர் கைது
- சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தின் உடுமலை பேட்டை வழியாக கேரளாவின் மறையூருக்கு ஒரு கார் வந்தது. சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கஞ்சா மற்றும் போதை பவுடர் இருந்தது. அதனை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த தாம்சன் செபாஸ்டியான் (வயது 23) மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேர் பிடிப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தேவிகுளம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். போதை பொருள் கடத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர். இவர்களில் ஒருவர் மாணவர் ஆவார். 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் எங்கிருந்து போதை பொருளை கடத்தி வந்தனர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல கொச்சியை அடுத்த கலூர், பச்சலம், எமலக்கரை பகுதியில் போதை பொருள் விற்றதாக வடமாநில தொழிலாளி ஒருவரும் சிக்கினார். அவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்தும் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் கொச்சி மற்றும் மறையூர் பகுதிகளில் போதை பொருள் வைத்திருந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.