காட்டு யானையுடன் நேருக்குநேர் நின்று செல்பி: வாலிபரை மிதித்து கொன்ற சோகம்
- ஸ்ரீகாந்த் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து காட்டு யானையுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
- காட்டு யானை வருவதை அறிந்து தூரத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றனர்.
செல்பி எடுக்க வேண்டும் என்ற மோகத்தில் பலரும் அபாயத்தை உணராமல் செல்பி எடுக்க முயன்ற தங்களது இன்னுயிரை இழக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற தான் செய்கிறது. அதுபோல தான் மகாராஷ்டிராவில் செல்பி எடுக்க முயன்றவரை காட்டு யானை தூக்கி போட்டு மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிரோலியில் உள்ள அபாபூர் வனப்பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து காட்டு யானையுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் காட்டு யானை வருவதை அறிந்து தூரத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றனர். ஆனால் காட்டு யானையோ அவர்களை விரட்டியது. இதில் 23 வயதான ஸ்ரீகாந்தை தூக்கி போட்டு மிதித்து கொன்றது. மற்ற இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஸ்ரீகாந்த் மற்றும் நண்பர்கள் ஆகிய மூவரும் கட்சிரோலி மாவட்டத்தில் கேபிள் பதிக்கும் பணிக்காக நவேகானில் இருந்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கட்சிரோலி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியே வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்தே இவர்களுக்கு காட்டு யானையுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.