காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியாது- மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி
- பி.பி.சி. ஆவண படம் குறித்து அனில் தெரிவித்த கருத்துக்களுக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசை அகற்ற காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்புதுறை மந்திரியாகவும் பதவி வகித்தார். இவரது மகன் அனில் அந்தோணி. காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை நிர்வாகியாக இருந்தார்.
சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பி.பி.சி. வெளியிட்ட ஆவண படத்தை காங்கிரசார் வெளியிட ஏற்பாடு செய்தனர். இதற்கு அனில் அந்தோணி எதிர்ப்பு தெரிவித்தார். பி.பி.சி. ஆவண படத்துக்கு ஆதரவு தெரிவிப்பது தேச இறையாண்மைக்கு எதிரானது என்று கூறினார்.
அனில் அந்தோணியின் கருத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார்.
இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனில் அந்தோணியின் ராஜினாமா குறித்து ஏ.கே. அந்தோணி கூறியதாவது:-
பி.பி.சி. ஆவண படம் குறித்து அனில் தெரிவித்த கருத்துக்களுக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களிலும் வெறுப்பு கருத்துக்கள் பதிவிடப்பட்டன.
இதன்காரணமாகவே அவர் கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார். அத்துடன் விஷயம் முடிந்துவிட்டது, என்றார்.தொடர்ந்து கட்சி தொண்டர்களிடம் அவர் பேசியதாவது:-
2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசை அகற்ற காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்காக 2-ம் கட்ட யாத்திரையை தொடங்க வேண்டும்.
2-ம் கட்ட யாத்திரை என்றால் வெறுப்பை பரப்பும் சக்திகளை கண்டறிந்து அவற்றை மக்களிடம் இருந்து தனிமைபடுத்த வேண்டும்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை அகற்ற காங்கிரஸ் கட்சியால் மட்டும் முடியாது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். அவர்கள் காங்கிரசுடன் கைகோர்க்க வேண்டும்.
அனைவரும் இணைந்து செயல்பட்டால் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியும். இதற்காக ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க பலருக்கும் அழைப்பு விடுத்தோம். பலர் கலந்து கொண்டனர். சிலர் பங்கேற்கவில்லை. அவர்கள் இனி வருவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.