இந்தியா

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் கட்சியில் இணைந்த பா.ஜ.க. முன்னாள் ஏம்.எல்.ஏ.-க்கள், தலைவர்கள்

Published On 2024-10-22 04:21 GMT   |   Update On 2024-10-22 05:06 GMT
  • லோயிஸ் மராண்டி ஹேமந்த் சோரனை தோற்கடித்தவர் ஆவார்.
  • ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்தவர் கட்சி மாறிய நிலையில், தற்போது 3 இணைந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் பா.ஜ.க.-வின் முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் பல தலைவர்கள் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இது பா.ஜ.க.-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

லோயிஸ் மராண்டி, குணால் சாரங்கி, லக்ஷ்மன் டுடு ஆகிய மூன்று பா.ஜ.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை ஹேமந்த் சோரன் வரவேற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த கேதார் ஹஸ்ரா மற்றும் ஏ.ஜே.எஸ்.யு. கட்சி தலைவர் உமாகந்த் ரஜக் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் கடந்த 18-ந்தேதி இணைந்த நிலையில் தற்போது இந்த மூன்று பேரும் இணைந்துள்ளனர்.

லோயிஸ் மராண்டி 2014 தேர்தலில் ஹேமந்த் சோரனை 5262 வாக்குகள் வித்தியாசத்தில் தும்கா தொகுதியில் தோற்கடித்தவர் ஆவார்.

2019-ல் ஹேமந்த் சோரன் தும்கா தொகுதியில் 13,188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனினும், அந்த தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பர்ஹைத் தொகுதி எம்.எல்.ஏ.-வாக நீடித்தார். அவரது சகோதரர் பசந்த் சோரன் லோயிஸ் மராண்டியை 6842 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மராண்டி மாநில தலைவருக்கு, தன்னைப் போன்ற அர்ப்பணிப்பு தொண்டர்கள் புறக்கணிக்கப்பு மற்றும் கட்சியில் உள்ள பிரிவினைவாதம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கோட்டையான தும்காவில் 2014-ல் பா.ஜ.க. எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குணால் சாரங்கி ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க.-வின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விலகிய பின், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார்.

லக்ஷ்மண் டுடு 2014-ல் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ராம்தாஸ் சோரனை கட்ஷிலா தொகுதியில் 6403 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இவர்களுடன் செரைக்கேலா, கணேஷ் மஹ்லி, பாஸ்கோ பெஸ்ரா, பாரி முர்மு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியில் இணைந்துள்ளனர்.

ஜார்க்கண்ட்ல் அடுத்த மாதம் 13-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. நவம்பர் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. நேற்று முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சுமார் 2.60 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

Tags:    

Similar News