இந்தியா

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக பிரபுல் பட்டேல், சுப்ரியா சுலே நியமனம்

Published On 2023-06-11 01:40 GMT   |   Update On 2023-06-11 01:40 GMT
  • தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார்.
  • வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும்.

புதுடெல்லி:

தேசியவாத காங்கிரசின் 25-வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத்பவார், கட்சியின் தேசிய செயல் தலைவர்களாக தனது மகள் சுப்ரியா சுலே எம்.பி. மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரை அறிவித்தார். தேர்தல் பணி, மாநிலங்களவை, மக்களவை பணிகள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்கள் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுப்ரியா சுலேவை கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவராகவும் சரத் பவார் நியமித்தார். தேர்தல் குழு தலைவர் என்பதால், தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும். 

சுப்ரியா சுலேக்கு மராட்டியம், அரியானா, பஞ்சாப் மாநில பொறுப்புகள் மற்றும் பெண்கள் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. பிரபுல் படேலுக்கு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், கோவா, மாநிலங்களவையின் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார். அதேசமயம், அவரது அண்ணன் மகனும் மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கவில்லை. அவரது முன்னிலையிலேயே புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News