பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்க்க முடிவு எடுக்கவில்லை: சரத்பவார்
- பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.
- உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.
மும்பை
மகாராஷ்டிராவில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் 25 ஆண்டுகளுக்கு மேல் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வந்தன.
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறில் அந்த கூட்டணி உடைந்தது.
இதைதொடர்ந்து சிவசேனா, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி கொள்கைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி மகாவிகாஸ் அகாடி கூட்டணி என அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார். இதை தொடர்ந்து மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.
இந்த அரசியல் பூகம்பத்துக்கு பின்னரும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியும் கூட்டணி அமைத்தன.
வஞ்சித் பகுஜன் அகாடியை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என உத்தவ் தாக்கரே கூறினார். அதே நேரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக பேசியதால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியை கூட்டணியில் சேர்த்து கொள்வது பற்றி மகாவிகாஸ் அகாடியில் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என சரத்பவார் கூறி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நேற்று கோலாப்பூரில் அவர் கூறியதாவது:-
தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அதுபற்றி நாங்கள் எதுவும் இதுவரை ஆலோசிக்கவில்லை. வர இருக்கும் தேர்தலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி சந்திக்கும். பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி பற்றி நாங்கள் இதுவரை எதுவும் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.